»அன்புறவுகள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்பது வடகாடு பகுதி தகவல் தொழில்நுட்ப இளையதலைமுறையினர்

கண்டதை எல்லாம் எழுதுரோம்பா..முடிஞ்சா படியுங்க!

உயர் தொழில் நுட்ப நுணுக்கங்களின் பட்டியல் மற்றும் விரிவான விளக்கங்களுடன் கீழ்காணும் தளங்களில்...
We will covered such as...

Java beginners as well as Oracle..
Middle Developers...
High end Reporting as ORACLE BIEE & Business Objects

http://www.oraclevadakadu.blogspot.com/
http://javavadakadu.blogspot.com/

Discussion forum by Oracle

http://apex.oracle.com/pls/apex/f?p=13189

பயன்பெற அழைப்பது வடகாடு பகுதி Thorn Group of IT

நாங்க சுத்துன ரீலு குடோனுங்க...

பங்கு சந்தையில் இப்போது

Thursday, January 29, 2009

வடகாடு பற்றிய ஒரு முன்னுரை

--




Tamil

கார்த்திகை பூ பற்றிய ஆய்வு

க‌ண்டி ம‌லைய‌க‌த்திலிருந்து....வ‌ட‌காடு

அமைவிடம் இன்று



இந்தியப் பேரரசின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுக்கா-வில் அமைந்துள்ள ஒரு ஊராட்சியாகும்.வடகாடு என்ற பெருங்கிராமம் இது தன்னுள் 18 பட்டிகளை(தெருக்கள்) கொண்டுள்ளது.
அவைகளின் தொகுப்பு

1.சேர்வைகாரன் பட்டி
2.சுந்தன் பட்டி
3.பருத்திக் கொல்லை
4.தோழன் பட்டி
5.பூனைக்குட்டி பட்டி
6.வடக்கு பட்டி
7.குறுந்தடிக் கொல்லை
8.பரமன் பட்டி
9.பள்ளத்து விடுதி
10.பாப்பா மனை
11.புள்ளாச்சி குடியிருப்பு
12.மாங்க்குட்டி பட்டி
13.வினாயகம் பட்டி
14.தெற்க்கு பட்டி
15.பிலா கொல்லை
16.சாத்தன் பட்டி
17.கூட்டான் கொல்லை
18.செட்டியார் தெரு
அந்தந்த தெருவில் வசிப்பவர்களை அந்த தெருவின் பெயருடன் அவர்களின் பெயரையும் சேர்த்து கூறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.எ-கா தோழகோவிந்தன் இவர் தோழன்பட்டியை சேர்ந்தவர்.

அமைவிடம் அன்று(தோரயமாக 1890-ம் ஆண்டு காலத்தில்)


அப்போது வடகாடு என்ற பெயரையே பெற்றிருக்கவில்லை.படத்தில் குறிப்பிட்டுள்ள ஆற்றங்கரை ஓரத்தில் சுமார் 100 குடிகளை கொண்டு விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள்(குடியானவர்கள்).அந்த ஆற்றில் 1905-ம் ஆண்டு ஏற்ப்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டு தங்களை பாதுகாத்துக்கொள்ள சற்று வடக்குநோக்கி நகர்ந்தனர்.வடக்குப்பகுதி மிகப்பெரிய காட்டுப்பகுதியாகும்.வடக்கு நோக்கி நகந்து காட்டுப்பகுதியின் சற்று உயரமான பகுதிஎன நினைத்து தற்போது ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதியில் குடியேறினர்.அப்போதுதான் வடகாடு என்ற பெயர் உருவாக்கப்பட்டது.இந்த காலக்கட்டத்தில் சிலோன் என்றழைக்கப்பட்ட ஜெயவர்த்தனபுரத்தில் கண்டி மலையப்பகுதியில் காவயல்தோட்டம்,கந்தப்பாலை இடங்களில் இருந்து கையில் வைத்திருந்த தொகையினை(தோல் காசு)எடுத்து கொண்டு இப்பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.அவர்கள் அனைவரும் மிகவும் திறமையும்,காரீயவாதிகளும் ஆவார்கள்.அவர்கள் அனைவரும் இந்தப்பகுதியிலே வடகாட்டான் கரை பெண்களை திருமணம் முடித்து வாழத்தொடங்கினர்.அதற்கான சான்று இன்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அவர்களது இம்பலத்தில் இடம் பெற்றுள்ள படத்தில் காணலாம்.பின்பு 1940-ல் ஏற்ப்பட்ட வெள்ளப் பெருக்கு இந்தப் பகுதியையும் பாதித்தது.இப்போது கரைகாரர்கள் என பிரிக்கப்பட்டு உள்ளவர்கள் அப்போது அந்தப்பகுதியில் மிகவும் கூட்டமாக ஒரே இடத்திலே வாழ்ந்தனர்.பின்னர் ஒவ்வொரு கரைகாரர்களும் தனித்தனியே பல பட்டிகளை உருவாக்கி அதனுல் குடியேரினர் அதில் முக்கியமானது பரமன் பட்டி ஏனெனில் அவர்கள் வெளியேரும்போது கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளும் நிரம்பிவிட்டன.கடைசியாக வெளியேறியவர்கள் அவர்களே! எனவேதான் தற்போது அந்தபட்டி மட்டும் பெரிய பட்டியும் இருவேறான கரைகாரர்களும் உள்ளனர்.சேர்வைகாரன் பட்டி மக்கள் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் விழாசடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தார்கள் இன்றும் அந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.இவர்களும் குடியமர்த்தப்பட்டவர்களே! பின்பு ஊருக்குதேவையான மற்ற வகுப்பினர்களை குடியமர்த்தினார்கள்.ஆகவேதான் இப்பகுதி மக்கள் ஆளும் திறன் அன்றிலிருந்து இன்றுவரை கொண்டுள்ளனர்.

ஆலயம் மற்றும் வரலாறு

கண்டி-ல் இருந்து புழம்பெயர்ந்தவர்களுள் 3-1 பங்கு வெள்ளால வகுப்பினரைச்
சார்ந்தவர்கள் அவர்களுடைய ஆதிக்கம் சற்று உயர்ந்து சில காலம் நீடித்து இருந்தது.குறிப்பாக பழனியப்பு பிள்ளை.பின்பு எஞ்சியிருந்த அவ்வகுப்பினர் மற்ற குடியானவர்களில் கலந்தனர்.கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது என ரெங்கன் அம்பலம் தலைமையில் ஆலயப்பணிக்காக அவருடைய சொந்த காணியினை கொடுத்து ஆலயம் கட்டும் பணியினை துவக்கினார்.இன்றும் அவருடைய தலைமுறைகளில் உள்ளவர்களே கோவிலைச்சுற்றியுள்ள மரங்களை பராமரிப்பதும் பலன் பெறுவதுமாக உள்ளனர்.இவர்களுக்கும் கண்டியில் இருந்த இவர்களுடைய உறவுகளுக்கும் 1985-ம் ஆண்டு வரை தொடர்பு இருந்துள்ளது.அதற்கான சான்று படத்தில் கடிதப் பரிமாற்ற விபரங்கள் உள்ளது.அவருடைய குடும்ப தலைமுறைகளில் வந்தவர்களில் குறிப்பிடப்படவேண்டியவர்கள் (1) சர்வதேச அளவிலான பொறியாளர் சான்றிதழை பெற்ற சி.துரைபாண்டியன்(எம்.சி.ஏ1989)கணினி பொறியாளர்(காலம் 1966-2002)(2)சுப.கோபாலன்(நிகரற்ற நீர்மூழ்கி மோட்டார் மெக்கானிக்)(காலம் 1965-2005) ஆவார்கள்.

இன்றைய ஆலயம் மற்றும் விழாக்காலங்கள்

இன்று ஆலய விழாக்கள் மற்ற கிராமங்க்களைவிட உயர்ந்த நோக்கத்தில் ஆண்டாண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.எவ்வித பாகுபாடின்றி ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு பிறக்கும் சித்திரை மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் அம்மனுக்கு காப்புகட்டி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.10-12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது ஊர்பொதுமக்கள் அனைவரும் பங்குகொள்வதற்க்கு ஏதுவாக கரை என்ற பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு நாட்களும் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பிரிவுகளாவன

1-ம் நாள்-காப்புகட்டும் விழாவானது ஊர்பொதுமக்கள்
2-ம் நாள்-வடகாட்டான் கரைகாரர்கள்களின் விழா
3,4-ம் நாட்கள்-பூனைக்குட்டி பட்டி மற்றும் தோழன் பட்டி கரைகாரர்கள்களின் விழா
5,6-ம் நாட்கள் வந்திக்கார வகையறாக்களின் பெருமையுடன் வழங்கும் சிறப்புமிகு சினிமாசார்ந்த பாட்டு கச்சேரிகள்
7-ம் நாள்-பகலில் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல்,சேர்வைகார வகையறாக்களால் நடத்தப்படும் அன்னதான நிகழ்ச்சி
8-ம் நாள்-பொங்கள் விழா
9-ம் நாள்-ஸ்ரீமுத்துமாரியம்மனின் தேர்பவனி விழாவும்,கண்கவர் வானவேடிக்கையும்,வடகாடு வடகாட்டான் கரைகாரர்கள்களின் விழா
10-ம் நாள் ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு மஞ்சள் தீர்த்த உற்ச்சவத் திருவிழா
11-12 பொதுமக்களின் விழா
திரைகடல் தான்டி திரவியம் தேடு என்ற தமிழனின் கூற்றுப்படி இன்று உலகம் முழுவதும் பொருள் ஈட்டுவதற்காக சென்றுள்ள உழைக்கும் கரங்க்கள் இவ்விழா காலத்தில் ஊர்திரும்புகிறார்கள்.அந்த உழைக்கும் கரங்களை மெழுகுவர்த்திக்கு நிகராக ஒப்பிடலாம்!

அந்தந்த பட்டிகளில் வாழும் மக்களில் ஒரு குறிப்பிட்ட வகையிலான பிரிவுகளை கொண்டுள்ளார்கள் அவைகலாவன
1.வடகாட்டான் கரைகரைகாரர்கள்
2.வந்திக்கார வகையறாக்கள்
3.சேர்வைகார வகையறாக்கள்
4.தோழ,பூனைகுட்டி பட்டி கரைகாரர்கள்
இந்த 4 வகையான கரைகளை மையமாகக் கொண்டே இக்கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழாவினை எவ்வித பாகுபாடின்றி மிகச்சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

யார் இந்த அம்பலகாரர்கள் (குடியானவர்கள்)

பார்க்கிறதுக்கு நல்லா கருப்பா இருக்காங்க இல்ல?ஆம் இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான முதுகெலும்புகள்.தங்களின் ரத்தத்தை வியர்வையாக மாற்றும் அதிசய பிறவிகள்.அவர்கள் வாழ்க்கை பாதையில் பல பேர் பயனடைந்துள்ளார்கள் ஆனால் இவர்கள் இன்னும் இதே வேலையே செய்து வருகிறார்கள்.மிகுந்த நாக்கு சுத்தம் கொண்டவர்கள் யாருக்கும் அஞ்சாதவர்கள் (பூமிதாயை தவிர).உலையில்தானே இருக்கிறான் என்று ஏளனம் செய்தால் குரல்வளையை பிடுங்கிவிடும் வேகம் கொண்டவர்கள்.
மனித குல நாகரிகத்தின் தோற்றுவாயாக அமைந்து,பல்வேறு வளர்ச்சி நிலைகளை அடைய சமூகத்திற்கு ஆதாரமாக விளங்குவது உழவுத் தொழில் தான். நவீன உலகில் மனித இருப்பினுக்குப் பின்புலமாக விளங்கும் உழவு, அறுபதுகளில் எங்கள் ஊரில் பிரபலமாக இருந்தது. இன்று ஊரைச் சுற்றிச் சீமைக் கருவேல முள் செடிகள் மண்டியிருக்கும் நஞ்சை நிலத்தைப் பார்க்கும்போது, இப்படியொரு நிலைமை எதிர்காலத்தில் உருவாகவிருக்கிறது என்று யாராலும் அன்று கணித்திருக்க முடியாது. கிராம வாழ்க்கை முழுக்க வயலுடன் தொடர்புடையதாக இருந்தது.சிறிய கடைகளும் ரைஸ்மில்லும் எங்கள் ஊரில் இருந்தன. சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வெளியூர்களில் படிக்கவோ அல்லது வேலைக்காகவோ சென்றிருந்தனர். உழுதோரும் உழுதுவித்தோரும் தவிர உழவுத் தொழிலைச் சார்ந்து வாழும் கொல்லர்,மர ஆசாரி போன்ற கைவினைஞர்களும் வாழ்ந்து வந்தனர். குடியானவர்கள் எனப் பிறரால் அழைக்கப்பட்ட வயலுடன் தொடர்புடையவர்களின் வாழ்க்கை உயிரோட்டம் மிக்கதாக இருந்தது. வயலுக்குச் சொந்தக்காரர்களில் ஓரளவு வசதியானவர்கள், தங்களுடைய நிலத்தைக் குடியானவர்களுக்கு ‘வாரத்துக்’குத் தந்திருந்தனர். வயல் வேலை செய்யும் குடியானவர்களுக்கு விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு குடி வாரமாகத் தரப்பட்டது;நிலவுடமையாளருக்கு மூன்றில் இருபங்கு நெல் தரப்பட்டது. தேவைகள் பெரிய அளவில் இல்லாத சூழலில், குறைந்த வருமானம் குடும்பத்தைப் பராமரிக்கப் போதுமானதாக இருந்தது. எனவே பெரிய அளவில் முரண்பாடுகள் இல்லை. வயலில் வரப்பு வெட்டுதல், களையெடுத்தல், நாற்று நடுதல், கதிர் அறுவடை எனப் பல்வேறு வேலைகளில் ஈடுபட்ட தலித்துகள் கூரைக் குடிசைகளில் அன்றாடப் பொழுதைக் கழிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். வர்க்க வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தாலும், முரண்பாடு என்பது போராட்டமாக வடிவெடுக்காத சூழல் நிலவியது.
எங்கள் ஊருக்குத் தெற்கே ஒரு மைல் தொலைவில் வைகை ஆறு. கோடைக்காலம் தவிர பிற நாட்களில் தண்ணீர் சுளித்தோடும். வெண்மணலில் பளிங்கு போல ஓடி வரும் நீரோடையைப் பார்க்கவே அழகாகத் தோன்றும். ஆற்றின் இரு கரைகளிலும் ஓங்கி உயர்ந்த தென்னை மரங்கள். அதனையடுத்து வெற்றிலைக் கொடிக்கால்கள்.அப்புறம் முழுக்க நெல் விளையும் அருமையான நஞ்சை நிலம். சமயநல்லூர் வெற்றிலைக்கெனத் தனித்த சிறப்பு உண்டு. நான்கைந்து நாட்களானாலும் வெற்றிலை வாடாது. ஊருக்கு வடக்கே பெரிய கண்மாய். அதில் சுமார் இருபதடி நீளத்தில் இரு கலிங்குகள் வெள்ள நீரைப் போக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்தன. விவசாய வேலைக்காகக் கண்மாய் நீரைப் பயன்படுத்த மூன்று பெரிய மடைகள் இருந்தன.மழைக்காலத்தில் நீரானது கண்மாயில் தேங்கும். எங்கள் ஊர்கண்மாயில் தலைப்பக்கம் தேனூர்க் கண்மாயும், காலடிப் பக்கம் பரவைக் கண்மாயும் இருந்தன.வயலுக்கான தண்ணீரைச் சிறிதும் வீணாக்கிடாமல், அடுத்தடுத்த கால்வாய்களின் மூலம் இணைக்கப்பட்ட கண்மாய்கள் நீர் மேலாண்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. வைகை ஆற்றில் வெள்ளம் பாயும்போது, அதிலிருந்து கால்வாய் மூலம் கண்மாய்க்கு நீர் கொண்டு வரும் வசதியும் பல கண்மாய்களில் உண்டு. இத்தகைய கால்வாய்கள் ‘காலங்கரை’ எனப்பட்டன. ஆடி மாதம் தொடங்கி, வயல் வைத்திருக்கும் சம்சாரிகளிலிருந்து வீட்டிற்கு ஒருவர் என மந்தையில் கூடி எல்லோரும் மொத்தமாகப் போய் காலங்கரையைச் சீர்ப் படுத்துவார்கள். வேண்டாத செடிகொடிகள் வெட்டி எறியப்படும். ஆற்று நீர் தங்கு தடையின்றி பாய்ந்து வரக் கண்மாய் நிரம்பும்.


‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி மட்டுமல்ல. நடைமுறைக்கு ஏற்றதும் கூட. ஏற்கனவே வீட்டில் தண்ணீர்த்தொட்டியில், விதைப்பதற்கான நெல் சாக்குமூட்டையுடன் மூழ்கடிக்கப்பட்டு, ஊற வைக்கப்பட்டிருக்கும். ஊறிய நெல் விதைகள், ‘நாற்றாங்கால்’ எனப்படும் சிறிய அளவில் உழுது பதப்படுத்தப் பட்டிருக்கும் வயலில் தூவப்படும். நெல் விதை தூவிய அன்று மழைபெய்தால் எல்லாம் போச்சு. தண்ணீருடன் நெல்லும் அடித்துச் சென்றுவிடும். வயலில் நெல் பாவிய மூன்று நாட்களுக்குப் பின்னர் பெரிய மழை பெய்தாலும் கவலையில்லை; அதற்குள் விதையின் வேர்கள் மண்ணுக்குள் இறங்கியிருக்கும். நாற்றாங்காலில் முளைவிட்டு வளரும் நெல்லின் விதைகளுக்குத் தண்ணீர் தினமும் பாய்ச்ச வேண்டும். நாற்றாங்காலில் மண்ணின் வளத்திற்கேற்ப 45 நாட்களில் நாற்றுகள் காற்றில் தலைசிலிர்த்து அசைவது பார்க்க அழகாக இருக்கும்.

பெரும்பாலான சம்சாரிகளின் வீட்டில் மாடுகள் வளர்க்கப்படுவது வழக்கம்.தொழுவத்தில் வீணாகும் வைக்கோல் கழிவுகள், சாணம், சாம்பல் போன்றன ஊருக்கு வெளியேயுள்ள குப்பைக் குழியில் தினமும் கொட்டப்படும். அவை வெயிலிலும் மழையிலும் மக்கிக் கெட்டியாக இறுகிப் போயிருக்கும். இத்தகைய குப்பையை மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்று வயல் முழுக்க ஆங்காங்கே குவியலாகக் கொட்டுவார்கள்.முதல் மழை பொழிந்தவுடன் ஆவணிமாதக் கடைசியில் குவியலாக இருக்கும் குப்பையை அள்ளிச் சென்று வயல் முழுக்கச் சிதறுவார்கள். ஓரளவு வசதியானவர்கள் கோடையிலே வயலில் ஆட்டுக் கிடை அல்லது மாட்டுக் கிடையைக் கிடத்தி நிலத்தை வளம் மிக்கதாக்கியிருப்பார்கள்.

ஓரளவு தொடர்ந்து மழை பொழியத் தொடங்கியவுடன், ஏரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு காளை மாடுகளை ஓட்டிக்கொண்டு செல்லுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏரில் மாடுகளைப் பூட்டிவிட்டு நிலத்தில் கீழே விழுந்து பூமா தேவியை வணங்கிவிட்டு மாட்டை ஓட்டுவார்கள். ஏரின் கொழுவானது மண்ணைப் பிளந்து தள்ளும். ஏரைப் பிடித்தவாறு உழவன் பின்னே போவான். ஒரே போக்கில் நான்கைந்து ஏர்கள் அடுத்தடுத்துச் செலுத்தப்படும் போது, மண் மிருதுவாகும். தொலைவில் நின்று ஏரோட்டுகிறவரைப் பார்க்கின்றபோது, அது உற்சாகம் தருவதாகத் தோன்றும். ஆனால் அது ‘சள்ளைபிடிச்ச’ வேலை. கொஞ்சம் அசந்தால் ஏரின் கொழுவானது மாடு அல்லது மனிதரின் காலைப் பதம் பார்த்து விடும். ஈர மண்ணுக்குள் அடியெடுத்து வைப்பதற்குள் மாடுகளும் மனிதனும் களைத்து விடுவார்கள். காலையில் கஞ்சி குடிக்க அல்லது பீடி குடிக்க ஒதுங்குகின்ற நேரம்தான் மாட்டுக்கு ஓய்வு. உச்சி வெயிலின்போது உழுவதை நிறுத்திவிடுவார்கள். வாய்க்கால் தண்ணீரில் குளித்துவிட்டு, மாட்டையும் குளிப்பாட்டிவிட்டு, ஏரைக் கழுவிவிட்டு வீட்டுக்குத் திரும்பும் குடியானவனின் வயிறு பசியால் காந்தும்.

நாள் முழுக்கத் ‘தொழி’யில் கிடந்து சகதியினால் ஈரமான கால்கள் சொத சொதவென உருமாறும். தொடர்ந்து ஈரக்களியில் உழப்படுவதற்காக ஏரில் பூட்டப்பெறும் காளைகளின் கால்கள் புண்ணாகிவிடும். சேப்பங் கொட்டை எனப்படும் காயை நீரிலிட்டுக் காய்ச்சி,அச்சாய நீரை இளஞ்சூட்டுடன் மாட்டின் கால்களின் மீது தெளிப்பார்கள். குப்பை கூளம் சிதறப்பட்ட வயலில் உழும்போது,முள், ஆணி பீங்கான் துண்டுகள் குடியானவர்களின் பாதங்களைக் கீறி விடும். மறுநாளும் உழ வேண்டிய கட்டாயத்தில், சீழ்ப் பிடித்த காலுடன் குடியானவன் படும் வேதனை அளவற்றது. வற மிளகாயை மை போல அரைத்து நல்லெண்ணெயில் சூடாக வதக்கி, அந்தக் களிம்பை அப்படியே முள்குத்திய இடத்தில் வைத்துத் துணியால் கட்டி விடுவார்கள். ஓரிரு நாட்களில் முள் குத்திய வீக்கம் வடிந்துவிடும்.

அவுரி, ஆவாரம் போன்ற செடிகளைப் பிடுங்கிக் கட்டாகக் கட்டி வயலுக்குக் கொண்டு வந்து உழப்பட்ட வயலில் நீருக்குள் பரப்பி காலால் மிதித்து விடுவார்கள். சில நாட்களில் இலை தழை நீரில் ஊறி மக்கி மடிந்து விடும். உழப்பட்ட நிலத்தை மட்டப்படுத்தப் ‘பரம்படித்தல்’ உதவுகின்றது. ஏழெட்டு அடி நீளமுள்ள மட்டமான பனைமரம் நுகத்தடியுடன் சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும். மாடுகள் நுகத்தடியைச் சுமந்து இழுத்துச் செல்ல, ‘தொழி’ மட்டப்படும். மாட்டுக் கயிற்றைக் கையில் பிடித்துக்கொண்டு, பரம்பின் மேல் ஏறி நின்று பயணிப்பது, வரப்பில் நின்று வேடிக்கை பார்க்கும் சிறுவர்களுக்குக் கவர்ச்சிகரமாக இருக்கும். பரம்படித்த வயலில் வேப்பம் புண்ணாக்கையும் சிலர் தூவுவார்கள். பூமித்தாயின் மீது அக்கறையுள்ள அறுபதுகளின் விவசாயிகள் எல்லாருமே இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினர்.வேதியியல் பொருளை உரம் என்ற பெயரில் அனுமதிப்பது அன்றைய குடியானவர்கள் அறியாதது. குளு குளு சம்பா, சீரகச் சம்பா, டொப்பி, கார், கார்த்திகை சம்பா, குதிரை வாலு.... இப்படி நூற்றுக்கணக்கான நெல் ரகங்கள் மண்ணில் விளைந்தன. மக்களின் பசியைப் போக்கின. கறுப்பு நிறத்திலான நெல்லினை அரிசி ஆலையில்,அரைக்கும்போது கிளம்பும் பிரியாணி வாசம் ஆளைக் கிறங்கடிக்கும். அந்த நெல் சீரகச் சம்பா. நான்கடி உயரமான நெல்லின் தாள்கள் மாட்டுக்கு வருஷம் முழுக்கத் தீனியாகச் சேமித்து வைக்கப்பட்டன. எங்கள் ஊரைச் சுற்றி காலி இடங்களில் வைக்கோல் போர்கள் பிரமாண்டமாக இருக்கும். வைக்கோலைப் போராகக் கட்டுவது என்பதே பெரிய கலை. அறுபதுகளின் நடுவில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகமான I.R.8 என்ற நெல்லுடன் பாரம்பரியமான விவசாயமுறை ஆட்டங்கண்டது. பாரம்பரியமான சிறுமணி அல்லது குளுகுளுச் சம்பா நெல்லிலிருந்து உருவாக்கப்பட்ட அரிசியில் சமைக்கப்பட்ட சோறு, மறுநாள் நீர் ஊற்றப்பட்டு ‘பழையது’ ஆனாலும் மணக்கும்.

நாற்றாங்காலில் விளைந்திருக்கும் நெல் பயிரினைப் பெண்கள் பிடுங்கியெடுத்து கைப்பிடியளவு கட்டாகக் கட்டுவார்கள். அவை வயலெங்கும் பரவலாக வீசப்படும்.நாற்று நடுவதற்காக ஏற்றிச் செருகிய சேலையுடன், தொழிக்குள் இறங்கும் பெண்கள் வரிசையாக நின்று நாற்றினை நேர்த்தியாக ஓடுவதைப் பார்க்க அழகாக இருக்கும்.வயலின் உரிமையாளர் வரப்பில் அமர்ந்து ‘கங்காணம்’ பார்த்துக் கொண்டிருப்பார்.நிலவுடைமையாளர் வரப்பின் மீது நடந்து செல்லும்போது, குறுக்காக நாற்று நடும் பெண் நாற்றுக்கட்டை வைத்து விட்டால், அவர் அதைத் தாண்டிச் செல்லக்கூடாது என்பது கிராமத்து வழக்கு. அவர் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு வாங்குவதற்குக் காசு தரவேண்டும். அப்புறம்தான் நாற்றுக்கட்டு வரப்பிலிருந்து நீக்கப்படும். நாற்று நடும்போது நாக்கைச் சுழற்றிக் குலவையிடுவதும் பாடல்கள் பாடுவதும் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

தொழியில் நடப்பட்ட நாற்று வேர்ப்பிடித்து வளர்வது வரை விவசாயி மனதில் பதற்றம் இருக்கும். திடீரெனப் பெரிய மழை பொழிந்தால், நடப்பட்ட நாற்றுகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். நாற்று வளர்ந்து பசுமையாக மின்னிடும் போது, விவசாயின் மனம் மகிழும். வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் என்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் மழை பொழியாமல் வறட்சி நிலவும் காலத்தில் கண்மாயில் இருக்கும் தண்ணீரை முறை வைத்துப் பாய்ச்சுதல் என்பது பெரும் பாடாகிவிடும். சில இடங்களில் தண்ணீர்ப் பாய்ச்சல் காரணமாக ஏற்படும் வாய்த் தகராறு கொலையில் முடியும். வயலில் நன்கு விளைந்திருக்கும் நெல் செடிக்கு செயற்கை உரமோ, பூச்சி மருந்து தெளித்தல் என்பதோ வழக்கினில் இல்லை.பச்சிலைப் பூச்சி என்ற பூச்சிவகை பெரிய அளவில் ஊர் வயல் முழுக்கத் தாக்கும்போது,கிராமத்து மடையான், தோட்டி போன்ற அடிப்படை அலுவலர்கள் பச்சிலைப் பூச்சியை விரட்ட சடங்கு செய்வார்கள். வைக்கோலால் செய்யப்பட்ட பெரிய பிரியை ஒருவர் ஊர் மந்தையிலிருந்து இழுத்து வர, அவருக்கு முன்னே ஒருவர் பறையை முழக்குவார்.இன்னும் சிலர் கையில் தீப்பந்தம் ஏந்திச் செல்வார்கள். அந்தக் குழுவினர் ஊர் வயல் முழுக்க வட்டமாகச் சுற்றிவந்து, இறுதியில் அந்தப் பிரியைத் தீயிலிடுவார்கள்.இப்படிச் செய்தால் பூச்சிகள் போய்விடும் என்பது கிராமத்தினரின் நம்பிக்கை.

அறுபதுகளின் பிற்பகுதியில் திடீரெனக் கிராமத்துச் சுவர்களில் பசுமைப்புரட்சி, I.R 8நெல் நடுவீர் என்ற எழுத்துகள் எழுதப்பட்டன. விவசாயிகளுக்கு கிராமக் கூட்டுறவு வங்கி மூலம் மானிய விலையில் யூரியா வழங்கப்பட்டது. எங்கள் வயலை வாரத்துக்கு உழுத முத்துச்சாமித் தேவருடன் மாட்டுவண்டியில் சென்று யூரியா வாங்கி வர பள்ளிக்கூட மாணவனான நானும் போயிருந்தேன். ஒரு மூட்டை யூரியா வாங்கினால்,இன்னொரு மூட்டை யூரியா இலவசமாக வாங்கி வந்தோம். அதே காலகட்டத்தில் வேன்களில் எங்கள் கிராமத்துக்கு வந்த ‘பாக்ட்’ கம்பெனிக்காரர்கள், சிறிய திரையில் யூரியா, பாக்டம்பஸ் உரம் போடுவதனால் கிடைக்கும் மகசூலைப் பற்றிக் குறும்படம் காட்டினார். கிராமத்தினர் திரண்டு போய்ப் படம் பார்த்தனர். ‘பயிர்களுக்கு ஒரு தரம் பாக்டம்பஸ்....’ என்ற விளம்பரப்பாடலைச் சிறுவர்கள் கூட முணுமுணுத்தனர். எங்கள் ஊரிலுள்ள திருமகள் திரையரங்கில் முதன் முதலாகக் காட்டப்பெற்ற விளம்பரப்படம்‘பாக்ட் கம்பெனியாரின் யூரியா’தான். அப்புறம் ‘ஆரோக்கிய வாழ்க்கையைக் காத்திடும் லைபாய்’ சோப்.

நெல்லின் தாளில் மலந்திருக்கும் பூக்கள் பால் பிடித்து காயாகும் வரை தொடர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டியது அவசியம். நெற் கதிர்கள் முற்றும் வரை அவற்றைப் பாதுகாக்க வேண்டியது முக்கியமான வேலை. எலிகள் பெருமளவில் நெற்கதிர்களைக் கத்தரித்து எடுத்து வளைக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும். வயலில் கதிர்களின் ஊடாகச் சரசரவெனச் செல்லும் ஆறடிக்கும் நீளமான பெரிய சாரைப் பாம்பை விவசாயிகள் கொல்ல முயல மாட்டார்கள். அவை எலிகளைப் பிடித்துத் தின்றுவிடும் என்பதனால், விவசாயிகளுக்கு நண்பனாக விளங்கின.

ஊர் முழுக்க ஒரே நேரத்தில் நெல் விளைந்தால் தனிப்பட்ட விவசாயிக்குப் பாதிப்பு இருக்காது. சில வேளை, யாராவது ஒருவரின் நிலத்தில், எல்லோருக்கும் முந்தி நெல் மணிகள் முற்றிவிட்டால், சிறிய குருவிகளும் பறவைகளும் படைபடையாகக் குவிந்துவிடும். அவை வயலில் விளைந்திருக்கும் நெல்லைச் சூறையாட முயலும்.விவசாயின் குடும்பத்தினர் பகல் முழுக்க வயலில் கிடந்து தகரடப்பாவைக் குச்சியினால் தட்டி ஒலியெழுப்பி, பறவைகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள்.அதிலும் காலை, மாலை இரு வேளைகளிலும் குடியானவர்கள் காட்டுக் கத்தலாகக் கத்திப் பறவைகளை விரட்ட முயலுவார்கள். சிறுவர்கள் கையில் கவட்டை வாரில் சிறிய கல்லை வைத்துப் பறவையைக் குறிபார்த்து அடித்து விரட்டுவார்கள்.


எழுபதுகளின் பிற்பகுதியில் கூட எங்கள் கிராமத்து வயல் வெளியில் ஊடாகச் சென்ற பெரிய வாய்க்கால்கள் சீறாக இருந்தன. ‘வார்நடை’ எனப்பட்ட வாரி ஓடையிலிருந்து தண்ணீர் சிறிய வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள் மூலம் எல்லா வயல்களுக்கும் பாய்ச்சப்பெற்றன. வாய்க்கால்களில் விரால், குறவை, அயிரை, உழுவை போன்ற மீன்கள் போய்க் கொண்டிருக்கும். வயலில் தண்ணீர்ப் பாய்ச்சச் சென்றவர், வீட்டுக்குத் திரும்பி வரும்போது, கையில் கோரைப்புல்லில் கோர்க்கப்பட்ட மீன்களுடன் திரும்பி வருவது சாதாரண விஷயம். வாய்க்காலில் குளிப்பது, ஆத்திர அவசரத்திற்கு அந்த நீரையே அள்ளிக் குடிப்பது என்பது இயல்பாக நடைபெற்றன. வைகை ஆற்றில் வெள்ளம் வருவது மெல்லக் குறையத் தொடங்கியபோது, கிணறுகள் தோண்டப் பெற்றன. பம்புசெட் எனப்படும் நீர் இறைவை இயந்திரங்களுக்கு மின் இணைப்புப் பெறக் குடியானவர்கள் பெரும்பாடு பட்டனர். ஒரு கிணற்றில் ஒரே நேரத்தில் இரு 5குதிரைத்திறன் மிக்க மோட்டார்கள் மூலம் நீரினை இறைத்து விவசாயம் செய்தாலும்,வற்றவே செய்யாத அற்புதமான கிணறு எங்கள் ஊரில் இருந்தது. இத்தகைய கிணறுகளை நம்பிச் சிலர் கோடையிலும் நெல்லைப் பாவி, விவசாயம் செய்தனர்.

நெல்லின் கதிர்கள் முற்றும் வேளையில், தாள்கள் பழுப்பேறிச் சாய்ந்திடும். நெல்லை அறுவடை செய்ய சில நாட்கள் தேவைப்படும். அந்த நேரத்தில் இரவுக் காவல் மிக முக்கியம். பெரும்பாலான சம்சாரிகள் பனி கொட்டிக் கொண்டிருக்கும் மார்கழி, தை மாதங்களில் வயலில் இரவு முழுக்கக் காவலுக்கு இருப்பார்கள். தோளில் துப்பட்டி,கையில் அரிக்கேன் விளக்கு, கம்பு எனப் பலரும் வயற்பரப்புக்குள் அலைந்து,விழிப்போடிருப்பார்கள். நெல்லைத் திருட வெளியூரிலிருந்து வருகிறவர்கள் பெரும்பாலும் வறட்சியான பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஓர் இரவில் பெரிய நெல் மூட்டையைத் தூக்கிக் கொண்டு நாற்பது மைல் தொலைவு நடக்குமளவு வலுவுடையவர்களாக விளங்கினர். திருடர்கள் பெரும்பாலும் நான்கைந்து பேர் கொண்ட கும்பலாகவே செல்வார்கள். இரவுக் காவலின்போது காலில் குத்தியது வயலில் முளைத்திருக்கும் நீர் முள்ளிச் செடியின் முள்ளா அல்லது தேளா?, பாம்பா?எனப் புரியாமல் துயரப்படும் விவசாயிகள், அதிகாலை நேரம் சற்று கண்ணயர்ந்து விட்டால் போச்சு. அந்த வருஷப்பாடு முழுக்கத் திருடர்கள் கையில் போய் விடும் எனவே பரந்த நிலப் பரப்பு முழுக்க விசிலொலிகள் காற்றில் சீறிப் புறப்படும். ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து ரொம்ப நேரமாகச் சத்தம் எதுவும் இல்லாவிடில், அந்தத் திசை நோக்கி நான்கைந்து பேர் கொண்ட குழுவினர் கிளம்பி விடுவார்கள். யாராவது ஓரிருவர் மிகவும் தாமதமாக நெல்லை விதைத்து, நட்டிருப்பார்கள். இத்தகையோரின் மகசூல் பின் தங்கிவிடும். பெரும்பாலோரின் வயல்களிலிருந்து தானியம் அறுவடை செய்யப்பட்ட பின்னர். ஆங்காங்கே சிலரின் நிலங்கள் மட்டும் தனியாக இருக்கும்.இத்தகைய நேரத்தில் விழிப்போடிருந்து காவல் காக்க வேண்டும்.

காவல்காரர், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நான்கைந்து பேர் கொண்ட கும்பல் வயலுக்குள் இறங்கி, விளைந்த நெற்கதிர்களின் கீழே, வேட்டியை விரித்து,நெல் மணிகளைக் கசக்கி விடுவார்கள். எல்லோரும் தூக்குமளவு நெல் சேர்ந்தவுடன் திருடர்கள் தங்கள் ஊரை நோக்கிப் பயணமாவார்கள். பொழுது விடிந்தவுடன் ஊர் முழுக்க இன்னார் வீட்டு வயலில் ‘நெல்லைக் கசக்கிட்டாங்களாம்’ என்பதே பேச்சாக இருக்கும். அந்த வயலுக்காரரின் வீட்டில் பெண்கள் கண்ணீர் சிந்த பெருங்குரலில் அழுது கொண்டிருப்பார்கள். வயலுக்குள் இறங்கிக் களவாண்டது எத்தனை பேர்?அவர்களின் வயது என்ன? திருடியது உள்ளூர் ஆள்தானா? என்பதை நிலத்தில் பதிந்துள்ள கால்தடத்தை வைத்துச் சொல்லுவதில் வல்லுநர் சிலர் எங்கள் ஊரில் இருந்தனர். வருஷம் முழுக்க வெயிலிலும், இரவிலும் பனியிலும் பாடுபட்டு வளர்த்த பயிரின் மகசூலை ஒரே நாள் இரவில் திருடர்களிடம் பறி கொடுத்துவிட்டு வேதனைப்படும் குடியானவர்களின் துயரத்திற்கு ஒப்புமை ஏதும் இல்லை.

இயற்கையின் சீற்றம், திருட்டு போன்றவற்றிலிருந்து காப்பாற்றப்பட்ட பயிரை அறுவடை செய்து, நெல்லை வீட்டிற்குக் கொண்டு சேர்ப்பது என்பது லேசுப்பட்டது அல்ல. நெல் அறுவடைக் காலத்தில் கிராமமே விழித்துக் கொண்டிருக்கும். உள்ளூர்க் கொத்தனார்களின் தலைமையில் ஏழெட்டுக் கதிரறுப்புக் குழுக்கள் உருவாக்கப்படும்.சில கொத்தனார்கள் இருபது ஆண்டுகளுக்கும் கூடுதலாகத் தொடர்ந்து கொத்து’வைத்திருப்பார்கள். ஒரு கொத்தில் ஆண் பெண் அடங்கலாக நாற்பது பேர் கூட இருப்பார்கள். கொத்தனார் அறுவடை செய்ய வேண்டிய வயலை நேரில் பார்த்து,வயலில் இருந்து களத்தின் தொலைவையும் கணக்கிட்டு ஒரு காணிக்கு இவ்வளவு நெல் தர வேண்டும் என்று கேட்பார். பேரத்திற்குப் பின்னர் ‘பேச்சு’ படியும்.

வயலுக்கும் களத்திற்கும் இடையில் சுமார் இரண்டு பார்லாங் தொலைவிலிருந்து ஒருமைல் வரை கூட தூரம் இருக்கும். களம் எனப்படும் பொட்டல்வெளி கூட்டித் தள்ளப்பட்டு, சாணி நீரால் தெளிக்கப்பட்டுச் சுத்தமாக இருக்கும். வயலுக்கு அறுவடை செய்யப் போகும் ஒரே கொத்தைச் சேர்ந்தவர்கள், பொது இடத்தில் கூடி, பொழுது விடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட வயலுக்குப் போய் விடுவார்கள். வயலின் உரிமையாளர் அல்லது அவரது குடும்பத்தினர் அங்குக் காத்திருப்பார்கள். வரப்பில் சாய்ந்திருக்கும் நெற்கதிர்களைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் வரிசையாக நின்று நெல்லின் தாள்களைக் கறுக்கரிவாளால் அறுக்கத் தொடங்குவார்கள்.

ஒவ்வொருவரும் அறுக்க வேண்டிய ‘நிரையை’க் கொத்தனார் அடையாளப்படுத்தி வைத்து விடுவார். சூரியன் கீழ்த்திசையில் தோன்றுவதற்குள் கிண்டலும் கேலிப்பேச்சுமாக ‘கதிரறுப்பு’ மும்முரமாக நடைபெறும். காலை பத்து மணியளவில் பெரிய பித்தளைத் தூக்கு வாளியில் இருக்கும் பழைய சோற்றை முந்தைய நாள் வியஞ்சனம் அல்லது மிளகாயைக் கடித்துச் சாப்பிடுவார்கள். சிலர் உப்புக் கல்லைத் தொட்டுக் கொண்டு பழைய சோற்றை ஒரு பிடி பிடிப்பார்கள். மீண்டும் வயலில் இறங்கி அறுவடையைத் தொடங்குவார்கள். கொத்தனார் வைக்கோலால் திரிக்கப்பட்ட பிரியைத் திரித்து வைத்திருப்பார்கள். அந்தப் பிரிகளால் நெல் தாள்கள் கட்டுக்களாகக் கட்டப்படும். ஆண்களுக்குப் பெரிய கட்டாகவும் பெண்களுக்குச் சற்றுச் சிறிய கட்டுகளாகவும் கட்டுவார்கள். ஆண் பெண் அடங்கலாக கட்டுகளைத் தூக்கித் தலையில் சுமந்து கொண்டு களத்துமேட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைவார்கள். களத்தில் வயலில் உரிமையாளர் மரத்தடியில் காத்திருப்பார். வயலில் கதிர்கள் சேகரிக்கப்பட்டவுடன், கீழே சிந்தியிருக்கும் விடுகதிர்களைப் பொறுக்கச் சிறுவர்களும் வயதான மூதாட்டிகளும் போட்டி போடுவார்கள். சிறுவர்கள் பொறுக்கிச் சேகரித்த கதிர்களைக் கசக்கி நெல்லைப் பலசரக்குக் கடைகளில் கொடுத்துத் தின்பண்டங்கள் வாங்கித் தின்பார்கள். மூதாட்டிகள் சிறிய விளக்குமாற்றினால்,வயலில் தாள்களுக்கிடையில் சிந்திக் கிடக்கும் நெல் மணிகளைக் கூட்டிக் கூடையில் சேகரிப்பார்கள்.

பெண்கள் நெல் தாள்களைக் கையினால் அள்ளி, நெல் அடிப்பவரை நோக்கி வீச, அதை இரு கைகளுக்கிடையிலுள்ள கயிற்றினால் லாவகமாக வாங்கி, தரையிலுள்ள கல்லின் மீது அடித்து, வெற்றுத் தாள்களைப் பின்னே எறிவார்கள். நெல் மணிகள் அம்பாரமாகக் குவிந்திட, வைக்கோலும் பெரிய போராக உயரும். நெல்லை முறத்தினால் அள்ளி காற்றுவாக்கைப் பார்த்து வானத்தில் வீசியெறிந்து, நெல்லையும் பதரையும் பிரிக்கும் அழகு சொல்லில் அடங்காது. நெல் தூற்றுவதில் வல்லுநர்கள் சிலர் எங்கள் ஊரில் இருந்தனர். சுத்தமாக்கப்பட்ட நெல்லைக் குவித்துப் ‘பொலி’யாக்கி, அளப்பதற்குப் பெரிய மரக்கால், சின்ன மரக்கால் போன்ற அளவைகள் பயன்படுத்தப்பட்டன.சாக்குக்குள் நிரப்பப்பட்ட நெல் மூட்டைகளாக மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டு,நிலவுடமையாளர் வீட்டிற்குக் கொண்டு செல்லப்படும். கூலிக்கு நெல் அளந்தபிறகு,காவற்காரர், மடையன், தண்ணீர் பாய்ச்சியவர், வண்ணார், கொல்லர் தோட்டி போன்றோருக்கு ‘சுதந்திரம்’ என்ற பெயரில் நெல் அளக்கப்படும். சில ஊர்களில் நெல் கட்டுகளைத் தரும் வழக்கமுண்டு. புலவர் பரம்பரையினருக்கு நெல் தரும் வழக்கமும் சில கிராமங்களில் உண்டு. இறுதியில் ‘ஓசி’ நெல் வாங்கக் காத்திருக்கிறவர்களுக்குக் கையினால் நெல்லை அள்ளிப் போடுவார்கள்.

ஓரிருநாட்களுக்குப் பின்னர் சூட்டடிப்பு நடைபெறும். வைக்கோல் படப்பிலிருக்கும் தாள்களைப் பிரித்து வட்டமாகப் போட்டு, அவற்றின் மீது மூன்று அல்லது நான்கு மாடுகளைப் பிணையலாகக் கட்டி ஓட்டுவார்கள். மாட்டுக் குளம்பினால், நெல்லில் ஒட்டியிருக்கும் எஞ்சிய தானியமும் கழன்று விடும். மாடுகள் சலிக்காமல் சுற்றிச் சுற்றி நடந்து வரும். மாடுகள் சாணியைக் கழியும்போது, அதை வைக்கோலினால் பிடித்து வெளியே எறிவார்கள். மாட்டை ஓட்டி முடித்த பிறகு வைக்கோல் உதறிக் காயப் போடப்படும் நெல்லை பொலியாகக் குவித்து வீட்டுக்கு எடுத்துப் போவார்கள்.வைக்கோல் பெரிய படப்பாக மேயப்படும். வருஷம் முழுக்க மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தப்படும் வைக்கோல் படப்பை ஒழுங்காக மேயாவிடில், மழைநீர் உள்ளே இறங்கி, வைக்கோல் அழுகி விடும். வைக்கோலை மேய்வதிலும் தொழில் நுட்பம் உண்டு.

பொதுவாக நெல்தாள்களைக் களத்துக்குக் கொண்டுவந்து, அவற்றை அடித்து,நெல்லைப் பிரிக்கும் வேலை மும்மரமாக நடைபெறும் போது, பொழுது மங்கலாகும் சாயங்கால வேளையில் பெண்கள் வீட்டுக்குப் போய் விடுவார்கள். குழந்தைகளைப் பார்க்கவும், உலை வைத்துச் சோறு பொங்கிடவும் அடுத்த வேலை அவர்களுக்குக் காத்திருக்கவும், ஆண்கள் வீடு திரும்ப இரவு பத்து மணி கூட ஆகும்.

கூலியைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு ஆறுபடி நெல் என்றால், பெண்களுக்கு நான்கு படி நெல் வழங்கப்பட்டது. கொத்தனார் எல்லோருக்கும் கூலி நெல்லைப் பிரித்து வழங்குவார். அப்பொழுது ‘சாமி’ கும்பிடுவதற்காகப் பொது நெல்லைத் தனியே எடுத்து வைத்துக் கொள்வார்.

நெல் அறுவடைக் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து கடுமையாக உழைக்கும் குடும்பத்தினர், அடுத்து வரும் ஏழெட்டு மாதத்திற்கான நெல்லைச் சேர்த்துக்’குளுமை’யில் பத்திரமாக வைத்திருப்பார்கள். அறுவடை எல்லாம் முடிந்தவுடன், ஒரு கொத்தில் சேர்ந்திருந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்து விழாவாகக் கொண்டாடுவார்கள்.

வயலில் நெல்லை விதைப்பது முதலாக, கதிர் முற்றியதுவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் வயலைப் பார்க்கும் குடியானவனின் மனம் நிறைவாக இருக்கும்.வரப்புவெட்டுதல், உழுதல் எனத் தொடங்கி கதிர் அடிக்கும் வேலை வரை செய்யும் கூலி விவசாயிகளுக்கும் நெல் விளைச்சல் மன மகிழ்வைத் தரும். எல்லோருக்கும் உழைப்பின் மூலம் ‘மகிழ்ச்சி’ கிடைத்தது. தாங்கள் கடுமையாக உழைத்ததன் பயனை,தாங்களே அனுபவிக்கும்போது, அதுவரை பட்ட ‘பாடுகள்’ மறைந்து போகும்; மீண்டும் மீண்டும் வயலில் உழைக்கும் ஆர்வம் ஏற்படும். வயலுக்கும் குடியானவனுக்குமான உறவு தொப்புள் கொடிபோல தொடர்ந்திருக்கும் தன்மையுடையது. குடியானவன் மட்டுமின்றி, கொல்லர் தொடங்கிப் பல்வேறு கைவினைஞர்களும் வயலின் விளைச்சலை நம்பியே வாழ்ந்தனர். வானம் பொழியாமல் வறட்சி ஏற்பட்டால்,முதலில் பாதிக்கப்படுவது குடியானவர்களைச் சார்ந்திருக்கும் கைவினைஞர்கள்தான்.வயலில் நல்ல மகசூல் கண்டு பொலி பெருகினால், பெரும்பாலான விவசாயிகள்,நெல்லைப் பிறருக்கு வழங்குவதில் பெருந்தன்மையுடன் செயல்படுவார்கள். ஆற்றுப் பாசனம் வளமாக நடைபெறும் பகுதிகளில் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில், ஊரைச் சுற்றியிருக்கும் பச்சைக் கம்பளம் போர்த்திய வயல்களின் அழகை எந்த ஓவியனாலும் பதிவாக்கிட முடியாது. இயற்கை மனிதனுக்கு அளித்த பெருங்கொடை வேளாண்மை.கிராமத்திற்குள்ளேயே வாழ்ந்து முடிக்கும் நிலையை வேளாண்மை ஏற்படுத்தியதால் சாதியக் கொடுமை, மூட நம்பிக்கை, பால் சமத்துவமற்ற நிலை போன்றன வலுவாக நிலவின. வானத்தைப் பார்த்து, காற்றைச் சுவாசித்து, இன்னும் சிறிது நேரத்தில் மழை சொட்டப் போகிறது என்று முன்னறிவிப்புச் செய்யும் இயற்கையோடியைந்த குடியானவர்கள் வாழ்நிலை ஒரு வகையில் இறுக்கமானது. எனினும் பெரிய அளவில் மன இறுக்கமற்று, அந்தரங்கம் எதுவுமில்லாமல் வெளிப்படையாகப் பேசுவதும் கிராமத்தினரிடையே நிலவியது. தெருவில் எதிர்ப்பட்ட திருமணமான இளம்பெண்ணைப் பார்த்து, "என்ன ஆத்தா இன்னங் குளிக்கிறியா" எனச் சத்தம் போட்டுக் கேட்கும் மூதாட்டியின் குரலில் ‘வெள்ளந்தித்தனம்’ இயல்பாகப் பொதிந்துள்ளது. இளம்பெண்ணும் அதை இயல்பானதாக எடுத்துக் கொண்டாள்.



இன்று அருமையான நெல்லைத் தந்த வயல் வெளிகள் எல்லாம் மனைகளாகப் பிரிக்கப்பட்டு, வீடுகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. காளை மாடுகளை வைத்துப் பராமரிப்பது பணம் செலவாகும் விவகாரமாகிவிட்டது. உழுவது தொடங்கி, கதிர் அறுத்தல், கதிரடித்தல் என எல்லாவற்றுக்கும் இயந்திரம் வந்துவிட்டது. நிலத்துக்கும் கிராமத்தினருக்குமான உறவு அறுந்துவிட்டது. இவை எல்லாம் பெரிய விஷயமில்லை. வயலில் வேலை செய்வதைக் கேவலமாகக் கருதும் மனநிலை உருவாகி இருப்பதுதான் மோசமானது. வளைகுடா நாடுகளில் ஒட்டகத்தைப் பராமரிக்கப் போவது கௌரவமாகிப்போன தமிழ்ச்சமூகத்தில், வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் கறம்பை நிலம்போலக் கிராமத்தினர் மனங்களும் உருமாறிவிட்டதுதான் சமூகக் கொடுமை
Source:ந.முருகேசபாண்டியன்